வேலூர்,
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நேற்று நடந்த ஒரு திருமண மண்டப திறப்பு விழா மற்றும் சீர்திருத்த திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டத்தை ஏன் கடுமையாக எதிர்க்கிறோம்? இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமோ இலங்கை தமிழர்களுக்கு மட்டுமோ பாதிப்பு என்று நினைக்க வேண்டாம். இந்துக்கள் உட்பட ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இதை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது, சட்டமன்றத்தில் இதை எதிர்த்து தீர்மானம் இயற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு தரப்பினர் ஒன்று சேர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்துள்ளனர். அப்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான் எங்கே பிறந்தேன் என்று எனக்கே தெரியாது. அதற்கான ஆவணம் என்னிடம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.
முதல்-அமைச்சர் உட்பட அனைவருக்குமே பாதிப்பு என்பதால்தான் அனைவருக்கும் சேர்த்துத்தான் இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம். அதற்காகத்தான் தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறோம். இதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கிறோம். நீங்கள் சமாதானம் ஆகிவிடுங்கள். துணை முதல்-அமைச்சர் பதவி தருகிறோம் என்ற ஒப்பந்தத்துடன் இரு தரப்பினரும் சமரசமாயினர். ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்றது. 3 மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று சொன்னார்கள். 3 மாதத்தில் அறிக்கை வரும் என்று சொல்லி 3 வருடங்கள் ஆகிவிட்டன. விசாரணை கமிஷன் இதுவரை 7 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதிதான் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க கடைசிநாள். அன்றைய தேதியில் மீண்டும் நீட்டிப்பு செய்து அறிவிப்பு வந்திருக்கிறது. இதில் மர்மம் இருப்பதால்தான் மீண்டும் மீண்டும் நீட்டித்துக் கொண்டே போகிறார்கள். விசாரணை முடிவுக்கு வந்துவிட்டால் நிச்சயமாக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவருமே வெளியில் இருக்க முடியாது. சிறைக்குள்தான் இருக்க வேண்டும். இப்போது வேண்டுமானால் இவர்கள் தப்பித்து விடலாம். தேர்தல் வருவதற்கு ஒரு வருடம்தான் இருக்கிறது. நாங்கள்தான் ஆட்சியை பிடிக்கப் போகிறோம். இதைச் சும்மா விடமாட்டோம். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் விலகும்.
துரைமுருகனுக்கு கூட இரக்க குணம் இருக்கலாம். நான் விடமாட்டேன். அது யாராக இருந்தாலும் சரி. இறந்தது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவாக இருக்கலாம். ஆனால் அவர் நாட்டின் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறதே தவிர நாட்டை பற்றியோ மக்களைப் பற்றியோ இவர்களுக்கு கவலை இல்லை. இருக்கும் வரை கொள்ளை அடித்து விட்டுச் செல்லலாம் என்ற எண்ணத்தில் தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது. அப்படிப்பட்ட இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் விரைவில் வரப்போகிறது. அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.