சென்னை
தி.மு.க. இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ராட்சத மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தினமும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கி வருகிறது. இதன்காரணமாக விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் முப்போக நெற்பயிர் சாகுபடி ஒரு போக சாகுபடியாக மாறியது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பொதுமக்களுக்கும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே, ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தொடக்கத்தில் இந்த வழக்கு சென்னையில் விசாரிக்கப்பட்டது. இதன்பின்பு, அங்கு நீதிபதிகள் யாரும் இல்லாததால் அந்த வழக்கு சென்னையில் இருந்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டது.
வழக்கை நீதிபதிகள் எஸ்.பி.வாங்க்டி, ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் நாகின் நந்தா ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் ஜோயல் தரப்பில் மூத்த வக்கீல் ரித்விக் தத்தா ஆஜராகி வாதாடினார்.
முடிவில் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீவைகுண்டம் அணைக் கட்டு பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க வேண்டுமென்றால் அதற்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் இருந்து தமிழக அரசு முறையான அனுமதியை பெற வேண்டும்.
ஆனால், அதுபோன்று அனுமதி எதுவும் பெறாமல் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கியது தவறு.
எனவே, ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க நிரந்தர தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுத்துக்கொள்ள எந்த தடையும் இல்லை.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.