சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை ஆகும். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இந்த மாதத்துடன் (டிசம்பர்) பருவமழை நிறைவு பெற உள்ளது. இந்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில் வடகிழக்கு பருவ மழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த ஆண்டில் வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக பெய்தது. 'டிட்வா' புயல் காரணமாக டெல்டா, வட மாவட்டங்களில் கன மழை பெய்தது. சென்னையில் பரவலாக மழை பெய்தது. அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யக்கூடிய மழை அளவுதான் வடகிழக்கு பருவமழையாக கணக்கில் கொள்ளப்படுகிறது.
வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 44.2 செ.மீ. என்பது இயல்பான மழைப்பொழிவாக உள்ளது. இதில் அக்டோபரில் 18 செ.மீ., நவம்பரில் 17 செ.மீ., டிசம்பரில் 9 செ.மீ. என்பது இயல்பான அளவு ஆகும்.
அதன்படி, நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்தது. இதில் அக்டோபரில் 23 செ.மீ. பெய்தது. அதாவது இயல்பைவிட 36 சதவீதம் அதிகமாக பெய்திருந்தது. நவம்பரில் 15 செ.மீ. மட்டுமே பெய்தது. இது இயல்பைவிட குறைவு. அதனையடுத்து டிசம்பர் மாதத்தில் அதாவது, நடப்பு மாதத்தில் வெறும் 4.5 செ.மீ. மழையே இதுவரை பெய்துள்ளது.
மொத்தத்தில் இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கமாக 44.1 செ.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில், 42.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை 10% மழை குறைவாக பதிவாகியுள்ளது. நெல்லையில் 95% இயல்பை விட அதிகமாக மழைபெய்துள்ளது. தென்காசி, விருதுநகர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிமாக மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தேனி, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இயல்பைவிட குறைவாகவே மழை பதிவாகியுள்ளது.
இது இயல்பான மழை அளவை விட 3 சதவீதம் குறைவு ஆகும். பருவமழை தொடங்குவதற்கு முன்பு, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும் என முன்கூட்டிய கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த கணிப்பு எல்லாம் பொய்த்து போய்விட்டது. இருப்பினும் இன்னும் பருவமழை முடிய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எதுவும் அறிவிப்புகளை வெளியிடவில்லை. ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை பருவமழை நீடிக்கும் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.