தமிழக செய்திகள்

கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை

நிலுவையில் உள்ள வழக்கை குறிப்பிடாமல் கமல்ஹாசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட 138 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள் மீது சென்னை மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் ரங்கநாதன் உள்பட பலர் 2001, 2002-ம் ஆண்டுகளில் தொடர்ந்த வழக்கில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டியில் பங்களா கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஒப்புதல் அளிக்க மறுக்கிறது என்றும் ஆனால், உத்தண்டி, சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய நபர்கள் பலர் விதிகளை மீறியும், கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிராகவும் வீடுகளை கட்டியுள்ளனர் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் டி.மோகன் என்பவரை நியமித்தனர். இதன்படி, வக்கீல் மோகன் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தார்.

அதேபோல சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், கிழக்கு கடற்கரை சாலையில் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். அதில், 138 பங்களாக்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இந்த 138 பேரில் நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்பட பல முக்கிய நபர்களின் பெயரும் உள்ளன.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 138 கட்டிட உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் அந்த நோட்டீசில், ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை குறிப்பிட வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதன்படி 138 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அதில் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை குறிப்பிடவில்லை. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநகராட்சி அதிகாரிகளின் இந்த செயலுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

திட்ட அனுமதியில்லாமலும், விதிமுறைகளை மீறியும் கட்டிடம் கட்டியவர்களுக்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விவரங்களை குறிப்பிடவில்லை. ஐகோர்ட்டு உத்தரவிட்டும் வழக்கின் விவரங்களை குறிப்பிடாமல் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

எனவே, அந்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அதிகாரிகளை முக்கியத்துவம் இல்லாத பணிக்கு மாற்றுவதுடன், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை மாநகராட்சி ஆணையர் எடுக்கவேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக, அவரை நேரில் ஆஜராகும்படி நாங்கள் உத்தரவிட நேரிடும் என்றும் தெளிவுபடுத்துகிறோம். இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி