தமிழக செய்திகள்

மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை 543-ஐ உயர்த்தக்கூடாது: மாணிக்கம் தாகூர் எம்.பி.

மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோதமான தொகுதி மறுவரையறை மசோதாவை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையான 543 என்பதை எக்காரணம் கொண்டும் உயர்த்தக் கூடாது; அந்த எண்ணிக்கையை அப்படியே பராமரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜனநாயக விரோதப் போக்கு

மழைக்காலக் கூட்டத்தொடரை முறைப்படி முடிக்காமல் 100 நாட்களுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டுவிட்டு, அரசியலமைப்புச் சட்ட தினமான நவம்பர் 26 அன்று வெறும் 4 நாட்கள் அவகாசத்தில் (நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை) நாடாளுமன்றத்தை அவசர அவசரமாகக் கூட்டியிருக்கும் மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோதப் போக்கிற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொகுதி மறுவரையறை மசோதா

வழக்கமாகப் புதிய கூட்டத்தொடரைக் கூட்ட 15 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் கேட்க 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்ற மோடி அரசு, கேள்வி நேரத்தையும், பூஜ்ஜிய நேரத்தையும், தனிநபர் மசோதாக்களையும் ரத்து செய்துவிட்டு, மக்களவைத் தொகுதிகளை 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை மட்டும் குறுக்கு வழியில் நிறைவேற்றத் துடிக்கிறது.

பாஜக சதிவலை

மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில், சமீபத்திய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்து, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, வட மாநில ஆதிக்கத்தை நிலைநாட்டப் பாஜக சதிவலை பின்னுகிறது. கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்றத்தில் 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் வெறும் 298 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்த பாஜக, இப்போது தங்களுக்கு இருக்கும் 322 வாக்குகளுடன், சில கட்சிகளின் மறைமுக ஆதரவுடனும் 360 என்ற மாய எண்ணைத் தொட முயற்சிக்கிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைக்கும் செயல்

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதாக நேற்றைய தினம் வரை வீரவசனம் பேசியவர்களின் திடீர் நிலைப்பாடு மாற்றம் வியப்பளிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் இதே மசோதாவை எதிர்த்து வாக்களித்துவிட்டு, வீதிக்கு வீதி மசோதா நகல்களைத் தீயிட்டுக் கொளுத்தியவர்கள், இப்போது 30 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு "மசோதா வாசகத்தைப் பார்த்துவிட்டு முடிவெடுப்போம்" என்று தயங்குவதும், வாக்கெடுப்பைப் புறக்கணித்து பாஜகவுக்கு மறைமுகமாகத் துணைபோக முயல்வதும் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைக்கும் செயலாகும்.

மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை 543-ஐ உயர்த்தக்கூடாது

இப்பிரச்சினையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாடு மிகத் தெளிவானது. முதலாவதாக, தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையான 543 என்பதை எக்காரணம் கொண்டும் உயர்த்தக் கூடாது; அந்த எண்ணிக்கையை அப்படியே பராமரிக்க வேண்டும். இரண்டாவதாக, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது; தற்போதைய நிலையையே மேலும் 25 ஆண்டுகளுக்கு அப்படியே முடக்கி வைக்க அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதே எமது உறுதியான கோரிக்கையாகும்.

தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் குறிப்பிட்டது போல, "நாடாளுமன்றத் தொகுதிகளைத் திருத்தி அமைக்க பாஜக கொண்டு வரத் திட்டமிட்டிருக்கும் சட்டத்தை ஆதரிக்கும் எவரும் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்கிறார்கள்; அவர்களை 21-ம் நூற்றாண்டு எட்டப்பர்கள் என்றே வரலாறு பதிவு செய்யும்!" எனவே, ஜனநாயக விரோதமான இந்த தொகுதி மறுவரையறை மசோதாவைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது; நமது உரிமைகளைக் காக்கத் தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT