மதுரை,
மதுரை மாவட்டத்தில் சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை, கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் சமூகவலைதள பிரிவு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையை சேர்ந்த விஜயகுமார் (வயது 47) என்பவர், பேஸ்புக் (முகநூல்) பக்கத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வந்ததாக, மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விஜயகுமாரை தேடிவந்தனர்.
அதன்பேரில் நேற்று அவரை மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் இதுபோன்று சமூக வலைதளங்கள் மூலமாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும், தவறான கருத்துகளை பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தெரிவித்தார்.