தமிழக செய்திகள்

தவறவிட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்

தேனியில் தவறவிட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

தேனியில் செல்போன் திருட்டு மற்றும் பொது இடங்களில் செல்போனை மக்கள் தொலைத்துவிட்டு தேடுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு செல்போன்களை தவற விட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தேனி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அவ்வாறு மக்கள் தவறவிட்ட 25 செல்போன்களை போலீசார் மீட்டனர்.

இதையடுத்து மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, தேனி போலீஸ் நிலையத்தில் இன்று நடந்தது. செல்போன்களை அதற்கு உரியவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி ஒப்படைத்தார். இதில், அல்லிநகரத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று தனது செல்போனை தவறவிட்டார். அவருடைய செல்போனை போலீசார் மீட்டுக்கொடுத்தபோது, ஒரு ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தீபாவளிக்கு தனது செல்போன் கிடைத்துள்ளதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.