கோபி,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வந்தது.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி ஈரோடு மாவட்டம் கோபி கரட்டூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், அ.தி.மு.க.வில் இருந்து விலகியவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு 10 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கிறேன். அதற்குள் ஒருங்கிணைக்கும் பணியை தொடங்க வேண்டும். இல்லையென்றால் என்னை போன்ற நிலையில் உள்ளவர்களை ஒன்றிணைத்து அந்த பணியை மேற்கொள்வோம், என்றார்.
கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வின் இந்த பேட்டி அ.தி.மு.க.விலும், தமிழக அரசியல் களத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து செங்கோட்டையனின் அனைத்து பதவிகளையும் பறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். அதுமட்டுமின்றி அவருக்கு ஆதரவாக செயல்பட்ட கட்சி நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக முன்னாள் எம்.பி. சத்தியபாமா மற்றும் கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்தநிலையில் கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள கே.ஏ.செங்கோட்டையனின் வீட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவினர் 100-க்கும் மேற்பட்டோர் மேளதாளங்கள் முழங்க வந்தனர். பின்னர் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் செங்கோட்டையனுக்கு பரிவட்டம் கட்டி தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் இருந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது பற்று கொண்ட அ.தி.மு.க.வின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) முதல் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆதரவுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து கூடுதலாக தொண்டர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார். கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றி உள்ளது.