கடலூர் மாநகரில் தனியார் பஸ்கள் தாறுமாறாக இயக்கப்படுவதாகவும், போக்குவரத்து விதிமுறைகளை கடை பிடிப்பதில்லை எனவும் போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் சென்றன. இந்த நிலையில் நேற்று மதியம் கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து பண்ருட்டி நோக்கி ஒரு தனியார் பஸ் அதிவேகத்தில் சென்றது. உழவர் சந்தை அருகில் சென்றதும், அங்குள்ள சிக்னலில் சிக்னல் போடப்பட்டது. ஆனால் பஸ் டிரைவர், அதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக பஸ்சை தொடர்ந்து இயக்கி சென்றார்.
உடனே அங்கிருந்த போலீஸ்காரர், மஞ்சக்குப்பத்தில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அவர், அந்த பஸ்சை பீச்ரோடு சாலையில் உள்ள சிக்னலில் வழிமறித்தார். பின்னர் போக்குவரத்து விதிமுறையை மீறி இயக்கியதற்காக, 500 ரூபாய் அபராதம் விதித்தார்.
மேலும் இதுபோன்று தொடர்ந்து இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பஸ் டிரைவரை, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.