தமிழக செய்திகள்

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை தொடரும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடக்கும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

சென்னை,

ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு அடைந்ததை தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் நேற்று நாடு முழுவதும் கருப்பு பண ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

சென்னை தியாகராயநகர் நடேசன் பூங்கா அருகில் கருப்பு பண ஒழிப்பு கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நேற்று காலை நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இல.கணேசன் எம்.பி., தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், துணைத்தலைவர் பி.டி.அரச குமார், செயலாளர்கள் கரு.நாகராஜன், சென்னை சி.ராஜா, இளைஞரணி செயலாளர் ஜி.சுரேஷ்கர்ணா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த கையெழுத்து இயக்கத்தை மத்திய ராணுவத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க. கொடியை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஏற்றி வைத்தார்.

பின்னர் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பத்திரிகையாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எந்த ஒரு பொருளை வாங்கினாலும், விற்றாலும் அது வெளிப்படையாக இருக்க வேண்டும். அப்போது தான் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும். முறையற்ற பொருளாதாரத்தால் நாட்டுக்கு பலம் இல்லை. ரொக்க பரிவர்த்தனையால் பயங்கரவாதிகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட யார் மூலம் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வாங்குகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்து வந்தது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையாலும், ரொக்க பரிவர்த்தனை தடுக்கப்பட்டதாலும் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் திருட்டுத்தனமாக ஆயுதங்கள் வாங்குவது தடுக்கப்பட்டுள்ளது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் காஷ்மீரில் பயங்கரவாதிகள் வங்கிகளில் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதை கவனித்து வரும் அரசு அதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை, ரொக்கமில்லா பரிவர்த்தனை போன்றவற்றால் நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி அதிகமாகி உள்ளது.

சிறிய ஓட்டல்கள், கடைகளில் ரொக்கமில்லா பரிவர்த்தனையை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. பெரிய அளவில் பண பரிவர்த்தனை செய்யும்போது ரொக்கமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ளும்படி கூறுகிறோம். ரொக்கமில்லா பரிவர்த்தனையான டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள சிறு வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கருப்பு பணத்தை ஒழிக்க பா.ஜ.க. எடுத்து வரும் நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி விமர்சிப்பது நியாயமற்றது.

கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2011-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட போதும், அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் பா.ஜ.க. அரசை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நிறைய தவறுகள் நடந்து கொண்டே இருந்தது. வெளிப்படையாக ஊழல் நடந்தது. நீர், நெருப்பு, ஆகாயம் என்று அனைத்திலும் முறைகேடு நடந்தது. அது இன்று வரை கோர்ட்டில் வழக்காக நடந்து கொண்டிருக்கிறது. அவர் பிரதமராக இருந்தபோது ஏராளமான தவறுகள் நடந்தபோதிலும் ஒன்றுமே தெரியாதது போன்று இருந்தார்.

கருப்பு பணத்தை ஒழிப் பதில் காங்கிரசுக்கு அக்கறை இல்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. கருப்பு பணத்தை சட்டப்பூர்வமாக்க முயன்றவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

வங்கி கணக்கில் சேமிப்பு வைப்பது தவறில்லை. அது வருமானத்துக்கு அதிகமான பணமாக இருந்தால் அதற்கு வரி செலுத்தி உள்ளார்களா என்பதை தெரிந்து கொள்ளும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. வாஜ்பாய் காலம் முதல் வலியுறுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதாவை துணிச்சலாக மத்திய அரசு நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது. தற்போது அரசு திட்டங்களில் போலியான நபர்கள் ஆதாயம் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன்பின்பு நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்குவது பற்றி அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது என்றார். பேட்டியின் போது பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...