குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்துவது வழக்கம். இந்த கூட்டங்களில் ஊராட்சி அளவில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.
தடை
கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டங்களுக்கு அரசு தடை விதித்து உள்ளது.இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சி இயக்குனர் பிரவீன் பி.நாயர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நடத்த வேண்டாம்
சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம். மாநிலத்தில் நிலவும் கொரோனா தொற்றின் நிலையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.எனவே கிராம பஞ்சாயத்துகளுக்கு மாவட்ட கலெக்டர்கள் தேவையான உத்தரவுகளை பிறப்பித்து, கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் என்று கேட்டுகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர தினம்
கொரோனா காரணமாக சுதந்திர தின விழாவை காண பொதுமக்கள் யாரும் நேரில் வரவேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்து இருக்கிறது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய சுதந்திரதின திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந்தேதி (நாளை மறுதினம்) காலை 9 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி சிறப்பிக்க இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக்குழந்தைகளும் பங்கேற்பார்கள்.
நேரில் வர வேண்டாம்
கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக்குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திரப்போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திரதின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி-ஒலிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில், இந்தாண்டு, பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவை காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுதந்திரதின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில், கண்டு, கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.