நெல்லை டவுன் ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் அங்கு சென்று சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சரஸ்வதி சாவுக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் அவரது உறவினர்கள், ரெங்கநாதபுரம் ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழர் விடுதலை களம் நெல்லை மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாநில சட்ட ஆலோசகர் பிரபு ஜீவன், அரசியல் கட்சியினர் நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், 'சரஸ்வதி மரணத்துக்கு காரணமான ஓட்டல் நிர்வாகம் மீதும், உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தி இருந்தனர். இதற்கிடையே சரஸ்வதியின் உடலை வாங்க மறுத்து ரெங்கநாதபுரத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.