சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரூ.33.6 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து பெறப்பட்டன என்ற விவரங்களை ரிசர்வ் வங்கி அளிக்க இயலாததால் சேகர் ரெட்டி மீதான வழக்கு காலதாமதம் ஆகிறது என்று சி.பி.ஐ. தெரிவித்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் ஆச்சர்யமளிப்பதோடு, அதிர்ச்சியளிப்பதாகவும் இருக்கிறது. முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மணல் ஊழலுக்கு இந்த சேகர் ரெட்டிதான் பினாமி கதாநாயகன் என்பது தமிழகத்தில் மணல் குவாரிகள் இருக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யால் சேகர் ரெட்டிக்கு எப்படி புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன? அந்த ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து பெறப்பட்டன? போன்ற முக்கிய அடிப்படைத் தகவல்களை பெற முடியாமல் திணறி நிற்கிறது.
சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து வாங்கப்பட்டன என்பதை சி.பி.ஐ.யால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது எவராலும் நம்ப முடியாததாக இருக்கிறது.
சேகர் ரெட்டி எங்கிருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பெற்றார் என்பதையும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதோடு, அந்த தகவல் எங்களிடம் இல்லை என்று ரிசர்வ் வங்கியே சி.பி.ஐ.க்குத் தெரிவித்திருப்பது, ஒட்டுமொத்த விசாரணையையே முடக்கி வைத்துள்ளது.
இதை பயன்படுத்தி கொண்டு, தன் மீதுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சேகர் ரெட்டி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் என்றால், இந்த வழக்கை நீர்த்துப் போக வைக்க அரசியல் பின்புலத்தோடு ரிசர்வ் வங்கியே துணைபோகிறதா என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கனவே, கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் திருப்பூரில் பிடிபட்ட வழக்கும், கரூர் அன்புநாதன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மீதெல்லாம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டுகளும் தூசு படிந்து, உண்மைகள் வெளிவராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மேலும், மத்திய அரசுக்கு ரூபாய் 250 கோடி வரி இழப்பை ஏற்படுத்திய தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டும் உள்நோக்கத்தோடு முடக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், சேகர் ரெட்டி விவகாரத்தில் புதிய நோட்டுகளைக் கொடுத்த வங்கி விவரம் தெரியவில்லை. குட்கா விசாரணையில் வருமான வரித்துறையின் அறிக்கையே காணவில்லை. 570 கோடி ரூபாய் விவகாரத்தில் கண்டெய்னர்கள் போனது தேர்தல் ஆணையத்திற்கும், ரிசர்வ் வங்கிக்கும் தெரியவில்லை போன்ற பல விசித்திரமான செய்திகள் தொடர்ந்து வெளிவந்தபடி இருக்கின்றன.
தமிழகத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகளில் கைப்பற்றப்பட்ட கருப்பு பணங்களின் மீதான நடவடிக்கை மட்டும் ஏன் திட்டமிட்டு முடக்கப்படுகிறது? என்ற கேள்விக்கு எங்கும் பதில் இல்லை.
குறிப்பாக, எந்த வங்கியிலிருந்து சேகர் ரெட்டி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றார் என்ற அடிப்படை தகவலை கூட ரிசர்வ் வங்கியால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு என்ற நடவடிக்கை எவ்வளவு மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
ஆகவே, கருப்பு பண எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கும் இந்த சமயத்திலாவது, மாபியா சேகர் ரெட்டி உள்ளிட்ட தமிழகத்தில் பல அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும், சேகர் ரெட்டிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தன என்ற விவரங்களை ரிசர்வ் வங்கி உடனடியாக சி.பி.ஐ.க்கு அளித்து, சேகர் ரெட்டி மீது வருமான வரித்துறை தெரிவித்த குற்றச்சாட்டுகளின் மீதான நடவடிக்கைகள் நீர்த்துவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.