சென்னை,
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனத்தின் தமிழ்நாடு பிரிவு தலைவர் டி.தாமஸ் பிரான்கோ ராஜேந்திர தேவ், செயலாளர் ஆர்.சேகரன் ஆகியோர் சென்னை மண்டல ரிசர்வ் வங்கி இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-
காத்துக்கிடக்கும் சூழ்நிலை
புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் தமிழகத்தில் பண வினியோகம் இன்னும் சீரடையவில்லை. கடந்த 2 மாதங்களாக வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் மட்டுமே கொடுக்க முடிகிறது.
அத்தியாவசிய தேவைகளுக்கு தேவையான பணத்தை எடுக்க பொதுமக்கள் தினந்தோறும் நீண்ட வரிசையில் வங்கிகள் முன்பாக காத்துக்கிடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பல ஏ.டி.எம். மையங்கள் முடங்கி கிடப்பதால் தங்களுடைய சம்பளம், ஓய்வூதியத்தை கூட அவர்களால் எடுக்க முடிவதில்லை. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் அரசு விதித்த ரூ.24 ஆயிரம் உச்சவரம்பு தொகையை எடுக்க வங்கிகளுக்கு பொதுமக்கள் படையெடுக்கின்றனர்.
மக்கள் அதிருப்தி
ஆனால் பொதுத்துறை வங்கிகளில் சில லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பு உள்ளது. இதை வைத்து வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அல்லது ரூ.4 ஆயிரம் மட்டுமே கொடுக்க முடியும். போதுமான பணம் இருப்பு இல்லாததால் சில வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக வங்கி அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஆகவே பொங்கல் பண்டிகைக்காவது வங்கிகளுக்கு அனுப்பும் பண வினியோகத்தை கூடுதலாக அதிகரித்து, பொதுமக்கள் தங்களுடைய கலாசார விழாவை மகிழ்ச்சியாக பாரம்பரிய முறையில் கொண்டாட வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.