சென்னை,
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் சட்டசபை தேர்தலில் திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது. இது முதல் கட்ட பேச்சுவார்த்தை. விடுதலை சிறுத்தைகளின் விருப்பத்தை பேச்சுவார்த்தையில் வெளிப்படுத்தி இருக்கிறோம். திமுக தரப்பில் அவர்களின் நிலைப்பாட்டை எங்களுக்கு விளக்கி இருக்கிறார்கள்.
தொகுதி பங்கீடு குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் முடிவு அறிவிக்கப்படும். எந்தெந்த தொகுதிகள், எந்த சின்னத்தில் போட்டி குறித்து என்ற தகவல்கள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் அறிவிக்கப்படும். நாளை மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.