சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், சேலத்தை சேர்ந்த மாணவர் ஹரிகரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். கொரோனா வைரசினால், தமிழகத்தில் கடந்த மார்ச் 17-ந்தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவினால் உயர்கல்வி தேர்வுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்கள் என்று அறிவித்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர், மார்ச் 16-ந்தேதி வரையிலான மாணவர்கள் வருகை பதிவேடு, செய்முறை தேர்வு முடிவுகள் உள்ளிட்டவைகளை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளார். அதில் கடைசி வரியில், செமஸ்டர் தேர்வு கட்டணத்தை மாணவர்கள் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
தேர்வே நடக்காதபோது, கட்டணத்தை செலுத்த சொல்வது சட்டவிரோதமானது ஆகும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து வகையான கல்லூரிகளில் சுமார் 7 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு மாணவன் ரூ.1,450 செலுத்த வேண்டும் என்றால், இது ரூ.100 கோடியை தாண்டும். கட்டணத்தை செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு உள்ளது. என்னை போன்று கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் தேர்வு முடிவை வெளியிடவில்லை. எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவை ரத்து செய்து, அனைத்து மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதேபோல, சவுந்தர்யா என்ற மாணவியும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் விசாரித்தார். மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கே.துரைசாமி ஆஜராகி, கொரோனா ஊரடங்கினால் பொதுமக்கள் கடுமையான சிரமத்தில் இருக்கும்போது, கட்டணம் செலுத்தினால் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்பது தவறு என்று வாதிட்டார்.
பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கட்டணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் அனைத்து மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் உடனே வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார். விசாரணையை வருகிற செப்டம்பர் 1-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.