தமிழக செய்திகள்

திமுகவிற்கு எதிராக தமிழ்நாடு மேற்கொண்டுள்ள அறப்போராட்டம் தொடக்கப்புள்ளியே! - நயினார் நாகேந்திரன்

என்டிஏ சார்பாக மாபெரும் கண்டனப் போராட்டம் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இன்று நடத்தப்பட்டதாக நயினார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக மாபெரும் கண்டனப் போராட்டம் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இன்று நடத்தப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அலைகடலென மக்கள் பங்கேற்று, நமது போராட்டத்திற்குப் பேராதரவு தந்தது, ஐந்தாண்டுகால திமுக ஆட்சியின் மீது வேரூன்றி இருக்கும் வெறுப்பையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதான நம்பிக்கையையும் ஒருசேர தெளிவாக வெளிப்படுத்துகிறது. அதேநேரம், நமது கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் ஒன்றிணைந்து வெற்றிகரமாக இப்போராட்டத்தை நடத்தியுள்ளது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒற்றுமையையும் வலிமையையும் பறைசாற்றுகிறது.

இன்று நடைபெற்ற இப்போராட்டம் திமுகவிற்கு எதிராகத் தமிழ்நாடு மேற்கொண்டுள்ள அறப்போராட்டத்தின் தொடக்கப்புள்ளியே! ஐந்தாண்டுகளாகத் தனது திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தை வதைத்து வந்த கொடூர திமுக அரசை இன்னும் 37 நாட்களில் மக்களின் பெரும் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி வீழ்த்தும்! தமிழகத்தை மீட்டெடுக்கும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.