தமிழக செய்திகள்

சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 157 பேருக்கு பணி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வு முடிவுகளில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 157 பேருக்கு பணி நியமனம் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை,

சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு பணிகளுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இதுவரை இங்கு பயிற்சிபெற்ற 2 ஆயிரத்து 965 பேர் தேசிய அளவிலும், மாநில அளவிலும் உயர் பதவிகளில் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந்தேதி 1,094 பணியிடங்களுக்கான குரூப்-2 முதல்நிலை தேர்வு நடந்தது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெற்று தேர்வு எழுதினார்கள். அதில் 15 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நடந்த முதன்மை எழுத்து தேர்வில் 2 ஆயிரத்து 200 பேர் வெற்றி பெற்றனர். அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதியும், பிப்ரவரி மாதம் 19-ந்தேதியும் நடந்த நேர்முகத்தேர்வில், எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர், பிப்ரவரி 20-ந்தேதி வெளியிடப்பட்ட குரூப்-2 தேர்வுக்கான இறுதி மதிப்பெண் பட்டியலின்படி, கடந்த மார்ச் மாதம் 19-ந்தேதி முதல் கடந்த 3-ந்தேதி வரை பணி நியமனத்துக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பங்கு பெற்றவர்களில் 1,094 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் ஒதுக்கப்பட்ட 1,094 பேரில், இ.பவானி (வணிக வரித்துறை உதவியாளர்), எஸ்.ஷதி ஷமீனா (சார் பதிவாளர்), பி.பிரியங்கா (சார் பதிவாளர்), பி.மோகனசுருதி (சார் பதிவாளர்), பாத்திமா (உதவி தொழிலாளர் ஆய்வாளர்), என்.பிரியதர்ஷினி(உதவி பிரிவு அலுவலர்-டி.என்.பி.எஸ்.சி.), கே.மோனிஷா (இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்), எஸ்.கோகுல்ராஜ் (சார் பதிவாளர்), கே.கபிலன் (சார் பதிவாளர்), இ.வெங்கட்டராஜன் (இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்), எஸ்.கே.வினுவர்ஷித் (உதவி ஆய்வாளர் உள்ளாட்சி நிதி தணிக்கை), ஆர்.பி.கார்வண்ணன் (உதவி ஆய்வாளர் உள்ளாட்சி நிதி தணிக்கை) உள்பட 157 பேர் (69 மாணவர்கள், 88 மாணவிகள்) மனிதநேய மையத்தில் படித்த மாணவ-மாணவிகள் ஆகும்.

மேலும், மாநில அளவில் சென்னையை சேர்ந்த பவானி 2-வது இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஷிதி ஷமீனா 3-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

வெற்றிபெற்றவர்கள் சைதை துரைசாமி மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தின் தலைவர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 157 பேருக்கு கிடைத்து இருக்கும் பணி ஒதுக்கீடு விவரம் வருமாறு:-

துணை வணிகவரி அலுவலர்-2, சார் பதிவாளர்-5, உதவி தொழிலாளர் ஆய்வாளர்-3, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்-5, உதவி ஆய்வாளர் உள்ளாட்சி நிதி தணிக்கை-36, முதல்நிலை ஆய்வாளர் கூட்டுறவு சங்கங்கள்-38, உதவி பிரிவு அலுவலர்(டி.என்.பி.எஸ்.சி.)-1, கைத்தறி ஆய்வாளர்-4, தணிக்கை ஆய்வாளர் இந்து சமய அறநிலையத்துறை-3, சிறப்பு உதவியாளர் கண் காணிப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு-1, தொழிற்கூட்டுறவு மேற்பார்வையாளர்-1, வருவாய் உதவியாளர்-57, செயல் அலுவலர்-1.

மேற்கண்ட தகவல்கள் மனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்