சென்னை,
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ளவேண்டும். தீவிர ஊரடங்கால் பலன் கிடைக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ள போதிலும், தேவை இருப்பின் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம். ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
போதுமான படுக்கைகள் மருத்துவமனையில் தயாராக உள்ளது. இன்னும் 2-3 நாட்களில் முழுமையான பலன் தெரியும். 18 45 வயதினருக்கு செலுத்த 3.14 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது; தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தினமும் சராசரியாக 1.64 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
தமிழகத்தில் முந்தைய அதிமுக அரசு கொரோனாவை கட்டுப்படுத்தத் தவறியதால் தான் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டது. இரண்டாவது அலையை முற்றிலும் ஒழித்து திமுக அரசு வெற்றி அடையும் என்று கூறினார்.
இதை தொடர்ந்து செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை நேரில் ஆய்வு செய்த அவர், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.