தமிழக செய்திகள்

ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

கூட்டணியில் குழப்பம் என திட்டமிட்டு பரப்பப்படுகிறது. திமுக - காங்கிரஸ் இடையே குழப்பம் இல்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னையில் இந்தியா டுடே கருத்தரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

2021 சட்டமன்ற தேர்தலை விட இந்த தேர்தல் கடினமாக இருக்காது. நிறைய சாதனைகளை செய்திருக்கிறோம். அவற்றை மக்களிடம் எடுத்து சொல்லி வெற்றி பெறுவோம். வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்கிறோம். திமுக ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

திமுக அரசு தொடர்ந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

பல நன்மைகளைச் செய்துவரும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பல நெருக்கடிகளைக் கொடுத்து, துரோகத்தையும் அநீதியையும் செய்து வருகிறது.

தமிழக அரசின் தோழி விடுதி திட்டத்தை மத்திய அரசு பின்பற்றுகிறது. மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. ஊழல் கூட்டணிக்கு பெயர் தான் டபுள் என்ஜின் கூட்டணி. மத்திய அரசு தமிழகத்துக்கு பட்ஜெட்டில் கொடுத்தது ஜீரோ, தேர்தலில் அவர்களுக்கு ஜீரோ தான்.

இந்தியா டுடே வெளியிட்ட கருத்து கணிப்பை உண்மையாக்குவோம். 3% வாக்கு வித்தியாசம் இருந்தாலே பெரும்பாலான இடங்களில் மாபெரும் வெற்றி கிடைக்கும். ஆனால், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் 12% வாக்கு வித்தியாசம் உள்ளது.

எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் திமுக கூட்டணிதான் தேர்தலில் வெல்லும். கூட்டணியில் குழப்பம் என திட்டமிட்டு பரப்பப்படுகிறது. திமுக காங்கிரஸ் இடையே குழப்பம் இல்லை. கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என மற்றவர்கள் நினைப்பது நடக்காது. திமுக, காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது. மற்றவர்கள் நினைப்பது நடக்காது. ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது. திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும்.

கூட்டணியில் முறிவு ஏற்படுவதற்காக ஆட்சியில் பங்கு என்பதை சிலர் கிளப்பி விடுகின்றனர். அது எடுபடாது. ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பது காங்கிரஸ்சிற்கு  நன்றாக தெரியும்.

அரசியலை தாண்டி ராகுல் காந்தியை ஒரு சகோதரராக பார்க்கிறேன். அவரும் அப்படித்தான்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும். கலைஞர் ஒரு பழமொழி சொல்லி இருக்கிறார். உரிமைக்கு குரல் கொடுப்போம் உறவுக்கு கைகொடுப்போம். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைக்கும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு அவர் கூறினார்.

அரசியலில் சுறுசுறுப்பாக இருக்க என்ன காரணம் என கேள்வி எழுப்பியதற்கு,

அரசியலில் களம் புகுந்ததில் இருந்து தொடர்ந்து உழைத்து வருகிறேன். தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். கலைஞர் கருணாநிதியிடம் நான் கற்றுக்கொண்டது உழைப்பு அதையேதான் உதயநிதிக்கும் சொல்கிறேன் என்றார்.