சென்னை,
த.மா.கா. சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் நேற்று மாலை நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், பிஜூசாக்கோ, சைதை மனோகரன் முன்னிலை வகித்தனர்.
மூத்த துணை தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், கோவைத்தங்கம், பொதுச்செயலாளர்கள் விடியல் சேகர், ஏ.ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜி.கே.வாசனுக்கு மத்திய சென்னை மாவட்ட தலைவர் ராம்குமார் வீரவாளை பரிசளித்தார். கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது:
காமராஜரின் புகழை பரப்புவதற்கும், அவருடைய பொற்கால ஆட்சியை கொண்டு வருவதற்கும் 100 சதவீதம் தகுதி பெற்ற கட்சி த.மா.கா. தான். காமராஜரின் ஆட்சிக்கு பிறகு 60 ஆண்டுகள் யாராலும் அவரின் பொற்கால ஆட்சியை கொடுக்க முடியவில்லை. மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை.
காமராஜர் ஆட்சியில் பொதுநல அரசியல் இருந்தது. இன்றைக்கு சுயநல அரசியல் தான் இருக்கிறது. காமராஜர் தனது ஆட்சியில் அணைகளை கட்டினார். திராவிட ஆட்சிகள் அந்த அணைகளை மனைகளாக மாற்றி விட்டார்கள். காமராஜர் ஆட்சியில் தொழில் புரட்சி ஏற்பட்டது. திராவிட ஆட்சிகளில் தொழில் வீழ்ச்சி தான் ஏற்பட்டு உள்ளது.
தமிழகம் மற்றும் இந்திய அளவில் கூட்டணி அரசியல் அவசியமாக உள்ளது. நல்லவர்களுடன் இணைந்து நாடாளும் நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது. தேர்தலில் த.மா.கா. தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில செயலாளர் அனுராதா அபி, இணை செயலாளர் மால்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.