சென்னை,
சென்னை தலைமை செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரே கோட்டை பாளையத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி குருசாமி, சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், கோட்டை பாளையத்தம்மன் கோவில் 50 ஆண்டு களுக்கு மேல் உள்ளது. இந்த கோவிலுடன், ஓம் சர்வ சக்தி சாய் ஆலயம் என்ற கோவிலும் உள்ளது. இங்கு நடை பெறும் பூஜைகளில், ஏராளமான பக்தர்கள் தினமும் கலந்துகொள்கின்றனர். இந்த நிலையில், இந்த கோவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்றும், இந்த கோவிலை அப்புறப்படுத்தப்போவதாகவும் புரசைவாக்கம் தாசில்தார் கூறினார். எந்த ஒரு நோட்டீசும் கொடுக்காமல், திடீரென கோவிலை இடிப்பது என்பது இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே, கோவிலை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் விசாரித்தார்கள். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் கூறும் கோவில் தமிழக அரசின் வருவாய் நிலத்தில் உள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருந்தாலும், தமிழ்நாடு ஆக்கிரமிப்பு சட்டத்தை பின்பற்றி நோட்டீசு கொடுத்து, அதற்கு தன்னிடம் விளக்கம் பெற்று, அதன்பின்னர் தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் கூறுகிறார்.
ஆனால், அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் ஏ.என்.தம்பிதுரை, அரசு நிலத்தில் சொந்த கோவில் கட்டி வழிப்பாடு, பூஜை நடத்த மனுதாரருக்கு எந்த உரிமையும் கிடையாது என்று வாதிட்டார்.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள், ஆதார ஆவணங்களான புகைப்படம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தோம். மனுதாரர் அரசு வருவாய் நிலத்தில் கோவில் கட்டியுள்ளார். எந்த கடவுளும், அரசு நிலத்தை ஆக்கிரமித்து தங்களுக்கு கோவில் கட்டவேண்டும் என்று கூறவில்லை. புராணக்காலத்தில் நடந்த பக்த பிரகலாதன் கதையில் கூட, இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று தான் சொல்லப்பட்டது.
யாராவது இறைவனுக்கு கோவில் கட்ட விரும்பினால், அது முறையான நிலத்தில் சட்டத்துக்குட்பட்டு கட்டவேண்டும்.
கோவில் கட்டுகிறேன் என்று கூறி பொது இடங்குளை ஆக்கிரமிக்கக்கூடாது. ஆனால், பலர் பொது இடங் களை ஆக்கிரமித்து கோவில் களை கட்டுகின்றனர். அதன்மூலம் பயன் அடைகின்றனர். அதனால், இந்த வழக்கில் கோவிலை அப்புறப்படுத்த அரசு அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கைகளில் எந்த தவறும் காண முடியவில்லை. இந்த கோவிலை 15 நாட்களுக்குள் தமிழக அரசு அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.