தமிழக செய்திகள்

மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டது சென்னையில் புயல் - மழையால் போக்குவரத்து பாதிப்பு இல்லை - போலீஸ் கமிஷனர் தகவல்

சென்னையில் புயல்-மழையால் சாலைகளில் விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னையில் உள்ள கீழ்பாக்கம், ஓட்டேரி, புளியந்தோப்பு மற்றும் கொண்டிதோப்பு ஆகிய போலீஸ் குடியிருப்புகளில் ஏற்பட்ட புயல்-மழை பாதிப்புகளை நேரில் சென்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று மாலை பார்வையிட்டார்.

அவருடன் கூடுதல் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் செந்தில்குமார், மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் விஜயராமுலு உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றனர். போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் குடும்பத்தினரிடம், கமிஷனர் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

சென்னையில் புயல்-மழை தாக்கியபோது, நான் உட்பட அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகளும், ஆயிரக்கணக்கான போலீசாரும் களத்தில் நின்று பணியாற்றினோம். அதிகாலை 3 மணி வரை சாலைகளில் நீர் தேங்காதவாறு மாநகராட்சி, தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து பணியாற்றினோம்.

அதிகாலை 3 மணிக்கு பிறகு சாலைகளில் விழுந்த மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். சாலையில் விழுந்த 131 மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டது. விடிய, விடிய போலீசார் ஆற்றிய களப்பணி காரணமாக சென்னையில் போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. போக்குவரத்தை எந்த பகுதியிலும் மாற்றி விடவில்லை.

5 மின்கம்பங்கள் விழுந்து விட்டது. அதுவும் உடனே அகற்றப்பட்டது. 6 போக்குவரத்து சிக்னல்கள் பழுதாகி விட்டது. அது விரைவில் சரி செய்யப்படும். மரம் விழுந்ததில் போலீஸ் ரோந்து வாகனம் ஒன்று சேதம் அடைந்தது.

போலீஸ் குடியிருப்புகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய அரசு ஏற்கனவே ரூ.2.57 கோடி ஒதுக்கி உள்ளது. அந்த பணத்தின் மூலம் குறைபாடுகள் சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. சென்னையில் மடிப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்துள்ளனர். சைதாப்பேட்டையில் சுவர் விழுந்து ஒரு பெண்ணும், குழந்தையும் காயப்பட்டு மூளைச்சாவு அடைந்துள்ளனர். டாக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டபிறகு இறப்பு உறுதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்