தமிழக செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை: ஆடிட்டர் குருமூர்த்தி மனு தள்ளுபடி

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராக விலக்கு கோரிய ஆடிட்டர் குருமூர்த்தி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஆறுமுகசாமி, சம்மன் அனுப்பும்போது ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்று ஆடிட்டரும், துக்ளக் இதழின் ஆசிரியருமான குருமூர்த்தி ஏற்கனவே கருத்து தெரிவித்ததை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த ஆணையம் 2 முறை சம்மன் அனுப்பியது.

முதல் முறை சம்மன் அனுப்பிய போது, ஆன்மிக சுற்றுலா செல்ல இருப்பதாக குருமூர்த்தி தெரிவித்ததை தொடர்ந்து அவர் ஆணையத்தில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. 2-வது முறை சம்மன் அனுப்பிய போது அவர், ஜெயலலிதா மரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்பதால் ஆணையத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று தனது வக்கீல் மூலம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆடிட்டர் குருமூர்த்தி தரப்பில் ஆஜரான வக்கீல், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது அவரை குருமூர்த்தி சந்திக்கவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்த ஆவணமும் அவரிடம் இல்லை என்று வாதாடினார். ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர், ஆணைய சட்டப்படி யாரை வேண்டுமானாலும் விசாரணை நடத்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆணையம் ஒரு நபரை விசாரிக்க வேண்டுமென்றால், எதற்காக அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்கு எந்த ஆவணங்களையும் அளிக்க வேண்டியது இல்லை என்று வாதாடினர்.

சசிகலா தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன், ஆடிட்டர் குருமூர்த்தி சசிகலா மீது சில குற்றச்சாட்டுகளை கூறி ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று பேசி உள்ளார். எனவே, அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரிய அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆடிட்டர் குருமூர்த்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஒரு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்படும்போது அதுதொடர்பான ஆவணங்கள் பரிசீலனைக்காக அரசு தரப்பில் ஆணையத்துக்கு அளிக்கப்படும். ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தை பொறுத்தமட்டில் எந்த ஆவணங்களும் அரசு தரப்பில் அளிக்கப்படவில்லை.

யார், யாரை விசாரிக்க வேண்டும் என்று ஆணையமே முடிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது. பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வந்த செய்திகள் மற்றும் ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்கள் கொடுத்த ஆவணங்கள் அடிப்படையிலும் விசாரணை தொடர்ந்து வருகிறது. அந்த அடிப்படையில் தான் ஆடிட்டர் குருமூர்த்தியிடம் விசாரணை மேற்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஆணையத்தில் ஏற்கனவே ஆஜராகி சாட்சியம் அளித்த சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா, முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், பத்திரிகையாளர் சோ மகன் ஸ்ரீராம் ஆகியோர் துக்ளக் இதழில் வந்த கட்டுரைகள் அடிப்படையில் சாட்சியம் அளித்துள்ளனர். இதை உறுதி செய்ய வேண்டியது உள்ளது. இதை செய்தால் மட்டுமே ஒரு சரியான முடிவுக்கு ஆணையம் வர முடியும்.

குருமூர்த்தியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பதால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆணையம் சம்மன் அனுப்பும் போது அவர் ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவர்கள் பாஸ்கர், செந்தில்குமார் ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்