தமிழக செய்திகள்

பரபரப்பாகும் தேர்தல் களம்: நாளை மறுநாள் நடைபெறுகிறது த.வெ.க. வேட்பாளர் அறிமுக கூட்டம்

234 தொகுதிகளிலும் த.வெ.க. தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதன்படி தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் 2026 சட்டசபை தேர்தலில் புதிதாக களம் காண இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் போட்டியிட இருக்கிறது. கூட்டணி அமைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்காததால், அடுத்தகட்ட நகர்வை நோக்கி த.வெ.க. பயணிக்க தொடங்கியுள்ளது.

234 தொகுதிகளுக்கும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அக்கட்சியின் தலைவர் விஜய், வடசென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாளை மறுநாள் (மார்ச் 27-ம் தேதி) மாமல்லபுரத்தில் த.வெ.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் . த.வெ.க. வேட்பாளர்களை மேடையில் அறிமுகம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜய் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 110 வேட்பாளர்களை விஜய் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.