தமிழக செய்திகள்

தனது மதச்சார்பின்மையை தவெக அரசு நிரூபிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவதை உறுதி செய்து தமிழர் பண்பாட்டைக் காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தனது மதச்சார்பின்மையை தவெக அரசு நிரூபிக்க வேண்டும்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என்று நீதிமன்றமே உத்தரவிட்ட பின்பும், இந்துக்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தீபமேற்றுவதை முந்தைய திமுக அரசு தடுத்த நிலையில், தீபமேற்றுவது பற்றிய தவெக அரசின் நிலைப்பாடு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், வரும் ஜூன் 22-ஆம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்திடம் அரசு தெரிவிக்கும் முடிவே, தவெக அரசு அனைத்து மதங்களையும் மதிக்கும் அரசா அல்லது ஒரு மதத்தை மட்டும் சார்ந்த அரசா என்பதை தமிழக மக்களிடம் தெளிவுப்படுத்தும்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண்

எனவே, "இது அனைவருக்குமான அரசு" என்று முழங்கிய முதல்-அமைச்சர் விஜய் இந்து மக்களின் உரிமையை காப்பதற்கு முனைய வேண்டும்! போலி மதச்சார்பின்மை பேசி, ஆட்சியை இழந்த திமுகவைப் போல அல்லாமல், மாற்று சக்தி என்பதை நிரூபிக்கும் வண்ணம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவதை உறுதி செய்து தமிழர் பண்பாட்டைக் காக்க வேண்டும் என்று பாஜக சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.