கடலூர் மாவட்டத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்டத்தில் நடைபெற இருந்த திருமணத்திற்காக ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற ஒரு கார் மீது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நபர் மீது மோதாமல் இருப்பதற்காக வேனை ஓட்டி வந்த டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேன் டிரைவர் உட்பட 6 பேர் காயமடைந்தனர். இதைக்கண்ட அவ்வழியே சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.