சட்டப்பூர்வ நடவடிக்கை
கொரோனா பரவல் தடுப்பு தீவிர நடவடிக்கையாக தமிழகத்தில் மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி-மீன் கடைகள் போன்ற அத்திவாசிய தேவைகளுக்கும் அனுமதி இன்றி தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் 31-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.ஊடகம்-பத்திரிகை துறை, பால் வினியோகம் போன்ற மிகவும் அவசியமான ஒரு சில பணிகளுக்கு மட்டுமே தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.அனுமதிக்கப்பட்ட நபரை தவிர வேறு யாரேனும் சாலைகளில் தேவையின்றி வலம் வந்தால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக போலீஸ்
உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.
டிரோன் மூலம் கண்காணிப்பு
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
இ-பாஸ் இன்றி வெளியே வரக்கூடாது. மருத்துவ தேவைக்களுக்காக வருபவர்கள் அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.முக்கிய சாலைகள் தவிர பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டு இருக்கும். இருவழி பாதைகளில் ஒருவழிபாதையாக அமலில் இருக்கும். மேம்பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். சிக்னல்கள் இயங்காது. சென்னையில் 153 இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்வார்கள். இதுதவிர சட்டம்-ஒழுங்கு போலீசாரும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிப்பார்கள். டிரோன்' கேமரா மூலமாகவும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கண்காணிக்கப்படும். இதன் மூலம் சாலைகள் மட்டுமின்றி தெருக்களிலும் மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கடைகளுக்கு சீல்
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். தடையை மீறி கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டால் கடை சீல்' வைக்கப்படும். எனவே பொதுமக்களும், வியாபாரிகளும் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.