தமிழக செய்திகள்

தொழிலாளியை அடித்துக்கொன்று உடல் புதைப்பு

கோத்தகிரி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்துக்கொன்று உடலை புதைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோத்தகிரி

கோத்தகிரி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்துக்கொன்று உடலை புதைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கூலித்தொழிலாளி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஈளாடா காந்தி நகரை சேர்ந்தவர் சிவகுமார்(வயது 43). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சிவகுமார் கடந்த 17-ந் தேதி இரவில் கேரடாமட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

புதைக்கப்பட்ட உடல்

இதற்கிடையில் சிவகுமாரின் மூத்த மகளை தொடர்பு கொண்ட ஒரு பெண், தனது கணவர் உனது தந்தையை கொலை செய்து, உடலை பொன்னூரில் குழி தோண்டி புதைத்து விட்டதாக செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது தாய் மற்றும் உறவினர்களிடம் கூறினார். அவர்கள் உடனடியாக சோலூர் மட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொன்னூர் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு அந்த பெண் கூறிய இடத்தில் தோண்டி பார்த்தபோது, சிவகுமார் கொலை செய்யப்பட்டு, உடல் புதைக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.

அடித்துக்கொலை

இதையடுத்து அந்த பெண் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர், காரைக்குடியை சேர்ந்தவர் என்பதும், அவரது கணவர் கேரடாமட்டம் பிரியா காலனியை சேர்ந்த விஷ்ணு(25) என்பதும் தெரியவந்தது. மேலும் சிவகுமாரை கொலை செய்துவிட்டு, அவரது வீட்டில்தான் விஷ்ணு பதுங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரைக்குடிக்கு விரைந்த போலீசார், நேற்று மாலை விஷ்ணுவை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு கூறியதாவது:-

கேரடாமட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சிவக்குமாருடன், விஷ்ணுவும் மது குடிக்க சென்றார். போதை தலைக்கேறியதும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த விஷ்ணு பொன்னூருக்கு சிவக்குமாரை அழைத்து சென்று, அடித்துக்கொலை செய்து, உடலை குழி தோண்டி புதைத்தார்.

இன்று பிரேத பரிசோதனை

பின்னர் காரைக்குடியில் பெற்றோர் வீட்டில் இருந்த தனது மனைவியை பார்க்க சென்றார். அங்கு கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த விஷ்ணு, தனது மனைவியை மிரட்டுவதற்காக, இப்போதுதான் சிவக்குமார் என்பவரை கொலை செய்து பொன்னூரில் புதைத்துவிட்டு வருகிறேன், அவரை போல உன்னையும் கொன்று விடுவேன் என்றுக்கூறி உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், சிவக்குமார் மகளின் செல்போன் எண்ணை தேடி கண்டுபிடித்து, தகவல் கொடுத்து உள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

சிவக்குமாரின் உடல் அழுகிய நிலையில் உள்ளதால், இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்