சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை அதிபர் பொறுப்பில் இருந்த ராஜபக்சே இனப்படுகொலையை நடத்தியபோது, அதனைச் செயல்படுத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் தான் மைதிரிபால சிறிசேனா ஆவார். இருவருமே தமிழ் இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளிகள் ஆவார்கள்.
ஈழத் தமிழ் இனத்தையே கருவறுத்துப் பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற வன்மம் கொண்டவர்தான் ராஜபக்சே என்பதை மானத் தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
ராஜபக்சே இந்தியாவுக்கு வந்து, பிரதமர் மோடியைச் சந்தித்ததும், மூன்று நாட்கள் டெல்லியில் முகாமிட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தமிழர்களின் மனக்காயங்களுக்கு மருந்திட்டதைப் போல வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபையில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தை எந்த எதிர்ப்பும் இன்றி ஒருமனதாக நிறைவேற்றினார். அத்தீர்மானத்தின்படி, சிங்கள ராணுவமும், சிங்களக் குடியேற்றங்களும் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, நடைபெற்ற இனக்கொலை குறித்து பன்னாட்டு நீதி விசாரணையும், தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால் கொல்லப்பட்டதையும், அதனைத் தடுப்பதற்காக முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தங்கள் உயிர்களை நெருப்புக்குத் தாரைவார்த்துப் பலியாகி தியாகம் செய்து மடிந்ததையும் மனதில் கொண்டு தமிழர்கள் செயலாற்ற வேண்டும். இலங்கை அரசாங்கத்தினுடைய மோசடியையும், சதி நாடகத்தையும் உலக நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நரேந்திர மோடி அரசு தொடக்கத்திலிருந்தே மனித உரிமைக் கவுன்சிலிலும், ஈழத்தமிழர்கள் குறித்த அனைத்துப் பிரச்சினைகளிலும் சிங்கள அரசுக்கு ஆதரவாகவே நடந்து வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.