பாலக்கோடு:
பஞ்சப்பள்ளி அருகே கொக்கிகல் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் அப்பகுதி பொதுமக்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு சென்ற மர்ம நபர்கள் டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் டிரான்ஸ்பார்மரை உடைத்து அதில் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர் மற்றும் ஆயிலை திருடி சென்றனர்.
இதையடுத்து நேற்று காலை மின்சாரம் இல்லாததால் டிரான்ஸ்பார்மர் இருந்த இடத்துக்கு சென்றனர். அப்போது திருட்டு சம்பவம் நடந்ததை அறிந்து உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து உதவி மின்பொறியாளர் திவாகர் பஞ்சப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.