ஆய்வுக்கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனரும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குனருமான நந்தகோபால் தலைமை தாங்கினார்.
மாவட்ட கலெக்டர் முரளிதரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட பயனாளிகள் எண்ணிக்கை, நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை, அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து, அவற்றின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆலோசனை
இதில் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், மகளிர் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர் ராஜா, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் வெற்றிவேல் மற்றும் அரசு துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் தங்கும் தனியார் இல்லங்களை கண்காணிப்பது குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, பதிவு செய்யாமல் இயங்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.