சேலம்,
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசப்பட்டியில் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில்,
“தேனி மாவட்டம் அ.தி.மு.க. சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை முதல்-அமைச்சராக உருவாக்கிய மாவட்டம். அ.தி.மு.க.வின் கோட்டை. எனவே தான் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. இணைய வேண்டும் என்பதுதான் எங்களின் தலையாய கோரிக்கை. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள், கட்சி நலனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்கள். .இன்றைக்கு அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று டி.டி.வி.தினகரன், அண்ணன் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்கள். எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இன்று இணைந்திருக்கிறார்கள்.
அவர்கள் நினைத்தால் எங்களையும் இணைக்கலாம். அவ்வாறு நடந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியடையும். 2-வது தர்மயுத்தத்தை நான் தொடங்கவே மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கமும்தான் காரணம். இன்றைய கூட்டத்தில் நிர்வாகிகளை மனதின் குரலாக எழுதிக் கொடுக்க சொன்னேன். உங்களின் குரலாகத்தான் ஒலிப்போம் என்று அவர்கள் கூறிவிட்டார்கள். .தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த இயக்கம் தொடங்கவில்லை. கட்சியை ஒருங்கிணைக்கவே தொடங்கப்பட்டது. அ.தி.மு.க.வில் இணைய நான் ரெடி. டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி ரெடியா?” இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலம் ஓமலூரில் அவர் அளித்த பேட்டியில், “ ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் அதிமுகவில் ஒ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை. ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவது என்பது பொதுக்குழு கூடி முடிவெடுத்தது.” என கூறினார்.
மேலும், இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். அது முடிவானதும் தொகுதி பங்கீடு பற்றி பேசுவோம். கூட்டணி விஷயத்தில் அதிமுக திட்டமிட்டு தெளிவாக செயலாற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.