தமிழக செய்திகள்

பெட்ரோல், டீசல் வினியோகத்தில் சிக்கல் இல்லை - இந்திய எண்ணெய் கழக தலைவர் தகவல்

வாடிக்கையாளர்கள் குழாய் மூலம் இயற்கை எரிவாயு பெறும் நிலைக்கு மாற வேண்டும் என சஹானி கேட்டுக் கொண்டார்.

சென்னை,

தமிழகத்திற்கு நேற்று வருகை தந்த இந்திய எண்ணெய் கழகத் தலைவர் சஹானி, மாநிலத்தில் எரிபொருள் நிலைமை குறித்து விரிவாக ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் வணிக ரீதியான சமையல் எரிவாயு ஒதுக்கீட்டை மூலநிலை யில் இருந்து 70 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இது உடனடி யாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு திறன்கள் ஏறத் தாழ முழு அளவில் இருப்பதால் பெட்ரோல், டீசல், விமானத்துக்கான எரிபொருள் உள்பட திரவ எரிபொருள் வினியோகத்தில் சிக்கல் இல்லை.

நாள்தோறும் சுமார் 5 லட்சம் சிலிண்டர்கள் என்ற மாநிலத்தின் சமையல் எரிவாயு தேவையை 100 சதவீதம் பூர்த்தி செய்யும் நிலையில் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. வீட்டு உபயோக சமையல் எரி வாயுக்கு அதிகபட்ச முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சில பகுதிகளில் 6 முதல் 8 நாட்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆஸ்பத்திரிகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய பகுதிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் 100 சதவீத சமையல் எரிவாயு தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமான கச்சா எண்ணெய் இருப்பில் இருப்பதால் எரிபொருட்கள் வாங்குவது தொடர்பாக மக்கள் பீதி அடைய வேண்டாம்.

வாடிக்கையாளர்கள் குழாய் மூலம் இயற்கை எரிவாயு பெறும் நிலைக்கு மாற வேண்டும். பாரம்பரியமான சமையல் எரிவாயு சிலிண்டர் என்பதோடு ஒப்பிடுகையில் குழாய் மூலம் எரிவாயு இணைப்புக்கு மாறுவதால், தூய்மையான, மலிவான, அதிகமான எரிபொருள் அனைவருக்கும் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.