சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோடு தெற்கு மாவட்டம் - ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி, வெள்ளோடு (சென்னிமலை) ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளோடு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த கூட்டத்தில் பெண்களிடத்தில் பெரிய மாற்றத்தை பார்க்கிறேன். பெண்கள் முடிவெடுத்து இங்கே வந்திருக்கிறீர்கள். இங்கு நான்கு மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. வருகிற தேர்தலில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும் என்று நாங்கள் நம்புவதை விட உங்களிடத்தில் தான் அதிகமான நம்பிக்கை இருப்பதை பார்க்கிறேன். அந்த அளவிற்கு சிறப்பாக திரண்டு இருக்கிறீர்கள்.
இந்த ஆட்சியை அகற்ற மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். மக்கள் என்று சொல்வதை விட பெண்கள் முடிவெடுத்து விட்டீர்கள். இங்கே இருக்கக்கூடிய தாய்மார்கள் முடிவெடுத்து விட்டீர்கள். இதுதான் உண்மை. இதற்கு முன் தி.மு.க. 5 முறை ஆட்சியில் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த பொழுது பெண்களுக்கு, சகோதரிகளுக்கு, தாய்மார்களுக்கு பல்வேறு திட்டங்களை, சாதனைகளை கருணாநிதி செய்து காட்டியிருக்கிறார்.
கடந்த 39 நாட்களாக, டெல்லியில் இந்தியா முழுவதும் இருக்கும் உத்தரப்பிரதேசம், பீகார், சத்தீஷ்கார், சண்டிகர், ஹரியானா, பஞ்சாப் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி தலைநகர் நோக்கிச் சென்று கடுங்குளிரிலும் இடைவிடாது ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இதுவரைக்கும் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. மத்திய அரசு மட்டுமல்ல, இங்கு இருக்கும் மாநில அரசும் அதற்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அந்த 3 வேளாண் சட்டங்களை, கண்மூடித்தனமாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆதரிக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் சீர்கெட்டு விட்டது என்று சொன்னார்கள். இப்பொழுது அண்மையில், இந்த ஆட்சி ஒரு பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்து, கோடி கோடியாய் அந்த விளம்பரத்துக்கு செலவு செய்து, மினி கிளினிக் ஆரம்பிக்கப்போகிறோம் என்று சொல்லி, தமிழ்நாடு முழுவதும் தொடங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
அது மக்களை ஏமாற்றுகிற திட்டம் என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். மினி கிளினிக் என்றால் என்ன? கிராமங்களில் தொடக்கநிலையில், உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கானவை தான். ஏற்கனவே இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. போகட்டும், மினி கிளினிக்கில் பணியாற்றுவதற்கு மருத்துவர்கள் நியமித்து விட்டீர்களா? செவிலியர்களை நியமித்து விட்டீர்களா? மருத்துவ உபகரணங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? என்று அந்த திட்டம் தொடங்கும்பொழுதே நான் கேட்டேன். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கிறவர்கள் தான் அங்கு பணி புரிவார்கள் என்று சொன்னார்கள்.
அதற்கு, கவுண்டமணி - செந்தில் வாழைப்பழக் காமெடி போல, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவோர்தான், மினி கிளினிக்குகளிலும் பணியாற்றுவார்கள் என்று - அதுதான் இது என்ற கதையாக - பதில் சொல்கிறார்கள். இப்படி ஒரு கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கும் ஆட்சிதான் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
மாணவர்கள் கல்விக்காக வாங்கி இருக்கும் கடனை தள்ளுபடி செய்வோம் என்று நாடாளுமன்ற தேர்தலிலும் சொன்னோம். இப்போதும் நான் சொல்கிறேன். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிறகு, நிச்சயமாக, உறுதியாக அந்த கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கூடிய சூழ்நிலையை நிச்சயமாக உருவாக்கி தருவோம்.
இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று சொன்னால் நீங்கள் எல்லாம் இந்த அ.தி.மு.க. ஆட்சியை நிராகரிக்க வேண்டும். எனவே உங்கள் முன்னால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு நான் முன்மொழிகிறேன். அதை நீங்கள் வரவேற்று வழி மொழிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.