தமிழக செய்திகள்

சமூக வலைதளங்களில் ஆபாச படம் பார்த்தவர்களை மிரட்டி ரூ.34 லட்சம் பறித்தனர்

ஆபாச படம் பார்த்தவர்களிடம் டெல்லி போலீசார் பெயரை பயன்படுத்தி ரூ.34 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

சமூக வலைதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பது, பதிவிறக்கம் செய்து பரப்புவது சட்டப்படி குற்றம் ஆகும். எனவே ஆபாச வலைதளங்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இந்தநிலையில் ஆபாச படம் பார்த்தவர்களிடம் டெல்லி போலீசாரின் பெயர், சின்னத்தை பயன்படுத்தி நூதன முறையில் பண மோசடி அரங்கேறியுள்ளது.

அதாவது, ஆபாச படம் பார்த்தவர்களின் இணையதள முகவரி மூலம் அவர்களது தனிப்பட்ட விவரங்களை நவீன தொழில்நுட்பம் ஒரு கும்பல் சேகரித்துள்ளது. பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண்ணுக்கு, நாங்கள் டெல்லி போலீசார். நீங்கள் ஆபாச படம் பார்த்துள்ளீர்கள். இதற்கு ரூ.5 ஆயிரம் அபராத தொகை செலுத்த வேண்டும். இல்லை என்றால் கைது செய்து சிறையில் அடைப்போம் என்று இந்தி மற்றும் ஆங்கில மொழியில் குறுந்தகவல் அனுப்பிவந்துள்ளனர். இதேபோன்று செல்போன் மூலம் பேசியும், இ-மெயில் தகவல் மூலமாகவும் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

இதனை உண்மை என்று நம்பியும், ஆபாச படம் பார்த்தது வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதியும் பலர் இணைய பரிவர்த்தனை மூலம் பணத்தை செலுத்தி வந்துள்ளனர்.

டெல்லி போலீசார் விசாரணை

இந்நிலையில் இந்த மோசடி செயல்பாடு குறித்து டெல்லி சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் நடத்திய விசாரணையில், மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களின் செல்போன் சிக்னல் சென்னை திருவல்லிக்கேணி பகுதியை காட்டியது.

இதுகுறித்து டெல்லி போலீசார் சென்னை திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு இங்கு வந்தனர். இந்த மோசடியில் ஈடுபட்ட 3 பேர் அடங்கிய கும்பல் திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. போலீசாரிடம் அந்த கும்பல் சிக்கியது.

ரூ.34 லட்சம் சுருட்டல்

விசாரணையில் அவர்கள் சென்னை மாங்காடு கே.கே.நகர் சுபம் நகரைச் சேர்ந்த ராம்குமார் (வயது 32), கொளத்தூர் ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த கேப்ரியல் ஜோசப் (37), திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்த தினோ சந்த் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் டெல்லி போலீசாரின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி பலரை ஏமாற்றி ரூ.34 லட்சம் வரை பணம் சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் 3 பேரையும் டெல்லி போலீசார் கைது செய்து, மேல் விசாரணைக்காக அழைத்துச்சென்றுள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்