நாகர்கோவில்,
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை என தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இப்போது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எங்கு சென்று போராட்டம் நடத்துவார். விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தமிழக அரசை கேளுங்கள் என்று நான் முன்பே சொன்னேன். போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணுவிடமும் கூறினேன்.
குடும்ப பிரச்சினை காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அ.தி.மு.க. அரசு கூறியிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதும் இதுபோன்றுதான் செய்தார்கள். இதுதான் தமிழகத்தில் உள்ள கழகங்கள் ஆட்சியின் வெளிப்பாடு.
இரட்டை வேடம்
தமிழகம் மோசமான நிலைக்கு செல்ல காரணம் தி.மு.க. தான். அதற்கு நிகரான பங்கு அ.தி.மு.க.வுக்கும் உண்டு. இந்தி விவகாரத்தில் இரட்டை வேடம் போடுபவர்களை மக்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
தமிழ் மொழியின் பெருமையை அனைத்து மாநிலங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லா மாநிலத்தில் உள்ள பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் குறைந்தது 100 தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த ஒரு வற்புறுத்தலும் இல்லாமல் பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். ஆனால் 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி இதுபற்றி பேசியிருப்பாரா?
தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்து விட்டது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை கேந்திரா வித்யாலயா பள்ளிகளில் சேர்க்க அதிகமாக வருகிறார்கள். தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள். தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரனுக்கு உதவி செய்தவர்களும் தண்டனை பெற்றாக வேண்டும்.
நியாயமான முறையில்...
பழம் பழுத்த மரத்தில் தான் கல் வீசுவார்கள். அதுபோல பா.ஜனதாவை அனைவரும் விமர்சிக்கிறார்கள். தமிழகத்தில் காய்ந்த மரமான தி.மு.க. அறுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. காமராஜர் இறந்தபோது அதை வைத்து அரசியல் தேடினார்கள். எந்த கட்சி வீழ்ச்சி அடைந்தாலும் மற்ற கட்சிகளுக்கு ஆதாயம்தான். பா.ஜனதா கட்சி நியாயமான முறையில் வளர்ந்து வருகிறது.
அ.தி.மு.க. கட்சி பிளவுபட்டிருந்தாலும் அக்கட்சியில் இருந்து யாரும் விலகி தி.மு.க.வில் சேரவில்லை. அந்த அளவுக்கு தி.மு.க. மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.