தமிழக செய்திகள்

‘மைக்ரோசாப்ட்’ பெயரில் போலி மென்பொருள் விற்ற 13 பேர் சிக்கினர்

குறைந்த விலையில் தருவதாக கால்சென்டர்கள் மூலம் வலைவிரித்து, ‘மைக்ரோசாப்ட்’ என்ற பெயரில் போலி மென்பொருளை விற்ற 13 பேரை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் மைக்ரோசாப்ட் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மென்பொருளை போலியாக தயாரித்து, குறைந்த விலையில் வெளிச்சந்தையில் சிலர் விற்பனை செய்கின்றனர். குறைந்த விலையில் கிடைப்பதால், பலர் இதை வாங்கி பயன்படுத்தியும் வருகின்றனர்.

போலியான இந்த மென்பொருளை விற்பதற்காக சில கும்பல்கள் கால்சென்டர்கள் நடத்தி வருகின்றன. வாடிக்கையாளர்களிடம் இனிக்க.. இனிக்க.. பேசி, அந்த மென்பொருளை எளிதாக விற்பனை செய்து விடுகின்றனர். சில பி.பி.ஓ. நிறுவனங்கள்கூட இந்த போலியான மென்பொருளை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.

மைக்ரோசாப்ட் நிறுவனம் புகார்

போலியான மென்பொருளை விற்பனை செய்து ஒரு கும்பல் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறது. மைக்ரோசாப்ட் மென்பொருளை மிகவும் குறைந்த விலைக்கு தருவதாக கூறி, பயனாளர்களின் கிரெடிட் கார்டு மூலம் பணம் பெற்றுக்கொண்டு, வைரஸ் லிங்குடன் கூடிய போலி மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர்.

பின்னர் கிரெடிட் கார்டு தகவல்களை பெற்றும், அவர்களின் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை பெற்றும் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய அதிகாரிகளிடம் புகார் அளித்ததின்பேரில், இந்தியா முழுவதும் உள்ள போலீசார் போலியான மென்பொருளை விற்பனை செய்தவர்கள் மற்றும் கால் சென்டர் நடத்தியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் சி.பி.சி.ஐ.டி.யின் சைபர் கிரைம் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மைக்ரோசாப்ட் பெயரில் போலியான மென்பொருள் விற்பவர்கள் மற்றும் கால்சென்டர் நடத்தியவர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக, இதுவரை 13 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு