திருவள்ளூர்,
திருவள்ளூர் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லாவிற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீசார் திருவள்ளூர் காந்திநகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது காந்திபுரம் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் கண்காணித்த போது அங்கு சந்தேகப்படும்படியாக 5 பேர் இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களில் 3 பேரை மட்டும் விரட்டி பிடித்தனர்.
மேலும் பாழடைந்த கட்டிடத்தில் சோதனை செய்தபோது சுமார் 14 கிலோ கஞ்சா, 430 போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்,அஜீத் என்கின்ற லிப் அஜீத், டேனியல் என்கிற ஜாக் என்பதும் போதைப்பொருட்களை பதுங்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.
அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகள், 3 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.