தமிழக செய்திகள்

திருவள்ளூர்: வீட்டின் ஓட்டை பிரித்து நகை- பணம் திருட்டு

ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் நகை- பணத்தை திருடிச் சென்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கொசவன்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (50). நெசவு தொழிலாளியான இவர், தனது மனைவி சுஜாதா மற்றும் மகன் வீரபத்திரன் (26) ஆகியோருடன் வசித்து வருகிறார். வீரபத்திரன் சென்னை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல் வீரபத்திரன் வேலைக்கு சென்றார். பின்னர் காலை 10 மணியளவில் விஜயகுமார் மற்றும் சுஜாதா தம்பதியினர் தங்களது வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள ஈஸ்வரன் கோவிலில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றனர்.

இதையடுத்து மதியம் வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் ஓடுகள் பிரிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மர்மநபர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் வீட்டின் பின்புறம் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். இந்த திருட்டு சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.