சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த நாகை மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளர் அம்பலவாணன் உருவப்படத்தை நேற்று திறந்து வைத்து, பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் எப்போது நாகப்பட்டினம் வந்தாலும் அப்போதெல்லாம் வயது வித்தியாசம் பார்க்காமல் ஒரு இளைஞரை போல ஓடிவந்து அன்போடு வரவேற்று, பரபரப்போடு பணிகளை ஆற்றி வந்த அம்பலவாணனை படமாக பார்க்க வேண்டிய சூழ்நிலையை இயற்கை உருவாக்கி விட்டது.
இது கொரோனா காலம். அனைவரும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மூத்த தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மக்களை பாதுகாக்கும் கடமையில் இருந்து மத்திய மாநில அரசுகள் தவறிவிட்டன. அதிலும் குறிப்பாக, தமிழக அரசு இந்த கொரோனாவை பயன்படுத்தி கொள்ளையடித்து கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு மக்களை பற்றி எந்த கவலையும் கிடையாது.
இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன, கிடைத்ததை சுருட்டிக்கொண்டு ஓடிவிட தயாராக இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் இருந்து நம்மையும் காப்பாற்ற வேண்டும், மக்களையும் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.