தமிழக செய்திகள்

போக்சோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர இதுவே தக்க தருணம் - உயர் நீதிமன்றம் கருத்து

பல இளைஞர்கள் போக்சோ சட்டத்தால் தங்கள் வாழ்க்கையை இழந்து விடுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கடந்த 2018 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் இந்திரன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து அந்த பெண்ணின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ஈரோடு மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அந்த பெண் திருமண வயதை எட்டியுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணும், அவரது தாயாரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தாக்கல் செய்தனர். அதில் பெண்ணின் திருமணத்திற்கு இந்த வழக்கு தடையாக உள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பெண்ணும், அவரது தாயாரும் காணொலி காட்சி மூலம் ஆஜராகி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காதல் உறவு காரணமாக சமீப காலமாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் போக்சோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டுவர இதுவே தக்க தருணம். பல பதின்பருவ இளைஞர்கள் போக்சோ சட்டத்தால் தங்கள் வாழ்க்கை இழந்து விடுகின்றனர் என கருத்து தெரிவித்து, அந்த இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய, மாநில பரிசீலித்து முடிவு எடுக்க நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்