தமிழக செய்திகள்

ஜனநாயகன் திரைப்படம் இணையதளத்தில் லீக் ஆனதற்கு இவர்தான் காரணம்; செங்கோட்டையன் குற்றச்சாட்டு

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

திண்டுக்கல்,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செங்கோட்டையன் நேறு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

அனைத்து தரப்பு மக்களும் தவெக தலைவர் விஜய்-ஐ ஏற்றுக்கொண்டுள்ளனர். பாஜகவின் அழுத்தத்திற்கு விஜய் தலைசாய்க்கக்கூடியவர் அல்ல. சிங்கம் தனியாகத்தான் வரும்...அது கூட்டத்தை கூட்டிக்கொண்டு வராது. சிங்கம் வெல்லும். விஜய் தலைமையில் அவரது ஆட்சி மலரும். தமிழ்நாடு அவரது கையில் உள்ளது. அதிமுகவை அழித்தது எடப்பாடி பழனிசாமிதான்.

அவர் துரோகத்தின் மொத்த உருவமாக இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பாஜக மூத்த தலைவரும், மத்திய இணை மந்திரியுமான எல்.முருகன் தான் ஜனநாயகன் திரைப்படம் இணையதளத்தில் லீக் ஆனதற்கு காரணம். எல்.முருகன்தான் அதற்கு பொறுப்பு

என்றார்.