தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இருவேறு காவல் நிலைய கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட மொத்தம் 7 குற்றவாளிகளில் ஒரு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 6 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி, இலுப்பையூரணி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் தேவிகுமார் (வயது 43). இவர் கடந்த 2020-ம் ஆண்டு கடன் தொல்லை காரணமாக தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பான வழக்கில் மேற்சொன்ன தேவிகுமாரை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோன்று கடந்த 2021-ம் ஆண்டு காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காடல்குடி, N.ஜெகவீரபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் காளிதாஸ் (வயது 35) என்பவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்தவர்களான வேல்சாமி மகன் அழகுபாண்டி(52), செல்லப்பாண்டி மகன் மாரிச்சாமி(51), தமிழரசன் மகன் சதீஷ்குமார்(33), அழகுபாண்டி மகன் பாண்டீஸ்வரன்(26), அன்புராஜா மகன் மனோஜ்குமார்(36) மற்றும் செல்லப்பாண்டி மகன் முருகன்(54) ஆகிய 6 நபர்களை காடல்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேற்சொன்ன 2 வழக்குகளின் விசாரணை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் (ADJ - I) நடைபெற்ற வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி தாண்டவம் நேற்று (2.11.2026) தேவிகுமாரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அழகுபாண்டி, மாரிசாமி, சதீஷ்குமார், பாண்டீஸ்வரன், மனோஜ்குமார் மற்றும் முருகன் ஆகிய 6 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 33 கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.