தமிழக செய்திகள்

தூத்துக்குடி: பைக்குகள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தனது பைக்கில் சில்லாநத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக்குடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் படுகாயமடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கல்லூரி மாணவர்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூரைச் சேர்ந்த, மறைந்த ஆனந்தராஜ் என்பவரது மகன் யுவன் சங்கர் ராஜா (வயது 18). இவர் திருநெல்வேலி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தாய் முத்துமாரியின்(45) பராமரிப்பில் யுவன் சங்கர் ராஜா வளர்ந்து வந்தார்.

2 பைக்குகள் மோதி விபத்து

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை யுவன் சங்கர் ராஜா தனது தாய் முத்துமாரியுடன் பைக்கில் புதியம்புத்தூர் வழியாக தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தார். சில்லாநத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக்குடன், இவரது பைக் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

3 பேர் படுகாயம்

இந்த விபத்தில் யுவன் சங்கர் ராஜா, அவரது தாய் முத்துமாரி, மற்றொரு பைக்கை ஓட்டி வந்த நயினார்புரத்தைச் சேர்ந்த கார்மேகன் மகன் லட்சுமணன்(30) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாணவர் உயிரிழப்பு

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி யுவன் சங்கர் ராஜா நேற்று உயிரிழந்தார். காயமடைந்த முத்துமாரி மற்றும் லட்சுமணன் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT