தூத்துக்குடி,
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது.
அதன்படி, நேற்று அதிகாலையில் தூத்துக்குடி நகரில் பரவலாக மழை பெய்தது. இதனால் அங்கு உள்ள உப்பளங்கள் மழை நீரில் மூழ்கின. நகரின் ஒரு சில இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மேலும் சில இடங்களில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது.
கோவில்பட்டியில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
கோவில்பட்டி மெயின் ரோடு, புது ரோடு, கடலையூர் ரோடு, புதுகிராமம், வேலாயுதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாறுகாலில் அடைப்புகள் இருந்ததால், மழைநீர் வழிந்தோட முடியாமல், சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்தவாறு மெதுவாக சென்றன.
இதேபோல் எட்டயபுரம் மற்றும் கழுகுமலையிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.