சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னையில், 13 வயது சிறுமிக்கு, பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த திமுக 139 ஆவது வட்ட துணை அமைப்பாளரும், திமுக வழக்கறிஞரணி நிர்வாகியுமான, பரத் என்ற நபர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், குறிப்பாக, சிறு குழந்தைகள் மீது பாலியல் குற்றங்கள் செய்பவர்கள், பெரும்பாலும் திமுகவைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது, திமுக அரசு, தங்கள் மீது நடவடிக்கை எடுக்காது என்ற ஒரே தைரியத்தில்தான்.
ஒட்டு மொத்த சமூக விரோதிகளும், பாலியல் குற்றவாளிகளும், திமுகவின் நிழலில் இருப்பதால், சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ, சமூகத்தின் மீதோ, எந்த விதமான பயமோ, பொறுப்போ அவர்களுக்கு இருப்பதில்லை. இதனால் பாதிக்கப்படுவது, சாதாரண பொதுமக்களும், பெண்களும், குழந்தைகளும்தான்.
பெண்கள் வெளியில் சென்றுவிட்டு, வீடு திரும்பும்வரை, பெற்றவர்களும், குடும்பத்தினரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு காத்திருக்கும் மிக மிக மோசமான நிலையில் இன்று தமிழகம் இருப்பதற்கு முழுக் காரணமும், கடந்த ஐந்து ஆண்டுகால திமுகவின் அலங்கோல ஆட்சி மட்டுமே.
குழந்தைகள் பாதுகாப்பு என்பது அனைத்துக்கும் அப்பாற்பட்ட விஷயம். இது போன்ற சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கும் திமுகவை முழுமையாகப் புறக்கணிப்பதே, நமது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க ஒரே தீர்வு. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.