தமிழக செய்திகள்

நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கி இருந்தவர்கள் இறங்கி வந்து ஓட்டு போட்டால் நிலைமை மாறும் கமல்ஹாசன் பேச்சு

நமக்கு ஏன் வம்பு என ஓட்டு போடாமல் ஒதுங்கி இருந்தவர்கள், இறங்கிவந்து வாக்களித்தால் நிலைமை மாறும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தாம்பரம்,

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீதருக்கு ஆதரவாக நேற்று காலை சென்னையை அடுத்த பல்லாவரம், தாம்பரத்தில் நடிகர் கமல்ஹாசன், டார்ச் லைட் சின்னத்தை காட்டி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:-

நகரம் வளர்ந்து இருக்கிறது. ஆனால் மக்களுக்கு வசதிகள் எதுவும் இல்லை. உங்கள் ஆதாரத்தேவைகள், பாதாள சாக்கடைகள் எதுவுமே இல்லை. அதைசெய்ய தவறிவிட்டார்கள். இதைப்பற்றி யோசிக்கவும் ஆளும் கட்சிக்கு நேரம் இல்லை. இந்த பகுதியை மக்கள் நீதி மய்யத்துக்கு ஒப்படைத்தால் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

குடிநீரும், சாக்கடையும் கலக்கும் அளவுக்கு அஜாக்கிரதை நிலவி கொண்டிருக்கிறது. நாங்கள் திட்டத்துடன்தான் வந்திருக்கிறோம். எங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்தால் செய்து காட்டமுடியும்.

மாற்றம் தேவை. கனவு மெய்பட விரலில் மை படவேண்டும். நீங்கள் ஒரு புரட்சியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறீர்கள். இது நிஜமான புரட்சியாக மாறவேண்டும்.

உயர்ந்த கட்டிடத்தில் இருந்துகொண்டு நமக்கு ஏன் வம்பு, ஓட்டுப்போட்டு இனிமேல் இவர்கள் திருந்தவா போகிறார்கள்? என அசட்டையாக இருப்பதால்தான் இந்த நிலைக்கு நாம் ஆளாக்கப்பட்டோம்.

ஓட்டுப்போடாமல் ஒதுங்கி இருந்தவர்கள் எல்லாம் இறங்கி வந்து ஓட்டு போட்டீர்கள் என்றால் இந்த நிலைமை மாறும். உங்களுக்கு நல்ல கட்சி என்று தோன்றுபவர்களுக்கு ஓட்டு போடுங்கள். அப்போது மக்கள் நீதி மய்யம் கண்டிப்பாக உங்கள் கண்ணில் தென்படும். இவ்வாறு அவர் பேசினார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு