கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நல்ல ஆட்சி மலர வேண்டும் என நினைப்பவர்கள் நம்மை கைவிட மாட்டார்கள் - சீமான்

யாருக்கு ஓட்டு போட்டால் நாடும், மக்களும் நலமாக இருப்பார்கள் என தெரிந்து ஓட்டு போடுங்கள் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை பகுதியில் 'எது அரசியல்? எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவில், சென்னை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள், மற்றும் மயிலாடுதுறை, ஆலந்தூர் வேட்பாளர்களை மேடையில் நிறுத்தி சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-

ரூ.2 ஆயிரம் கொடுப்பவர் மக்களுக்கு சேவை செய்யவா வருவார்? மக்களுக்கு சேவை செய்பவன் எதற்காக பணம் கொடுக்க வேண்டும்? ரூ.5 ஆயிரம் மக்களுக்கு கொடுத்துவிட்டு ரூ.6 ஆயிரத்து 800 கோடியை தமிழக அரசு இழக்கிறது. அரசு காசிலே ஒரு கட்சி தனக்கான வாக்கை உறுதி செய்கிறது. இது மிகப்பெரிய கொடுமை. ஒரே நேரத்தில் 1.31 கோடி பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் செல்கிறது. இதை மத்திய அரசும் அனுமதிக்கிறது.

பாஜக அரசு மொத்தமாக ரூ.10 ஆயிரம் போட்டது. இங்கு தி.மு.க. அரசு 3 தவனையாக ரூ.8 ஆயிரம் கொடுத்துள்ளது. மக்களுக்கான அரசியல் இங்கு இல்லை. நாம் மக்கள் அரசியல் மட்டுமே செய்கிறோம். நான் கூட்டணிக்கு செல்லவில்லை என்று சிலருக்கு கண்ணை உறுத்துகிறது. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு கொடியில் வண்ணம் மாறும். ஆனால், கொள்கையில் எண்ணம் மாறாது.

கூட்டணி வைக்காமல் எப்படி வெற்றிபெறுவது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் எப்படி வெற்றி பெறுவது என்று காட்டுகிறேன். யாருக்கும் பணம் கொடுக்காமல் 36 லட்சம் வாக்கை வாங்கியது நாம் தமிழர் கட்சி மட்டுமே.

Also read:கூட்டணி ஒப்பந்தமானதில் மனநிறைவோடு இருக்கிறோம் - செல்வப்பெருந்தகை பேட்டி

நம்முடைய உரிமைகளை விற்க கூடாது. நாம் ரூ.500, 1,000-க்கு ஓட்டை விற்கிறோம். அவர்கள் ஓட்டை வாங்கிக் கொண்டு நாட்டை விற்கிறார்கள். யாருக்கு ஓட்டு போட்டால் நாடும், மக்களும் நலமாக இருப்பார்கள் என தெரிந்து ஓட்டு போடுங்கள். நல்ல ஆட்சி மலர வேண்டும் என நினைப்பவர்கள் நம்மை கைவிட மாட்டார்கள். இந்தத் தேர்தல் களம் நம் கையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.