சென்னை,
சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் மாநிலம் முழுவதும் மின் வினியோகம் தடையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. தடையில்லா மின்சாரம் வழங்குவதுதான் அரசின் நோக்கம். அதற்காக அதிகாரிகளும், பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
பொதுமக்கள் வீடுகளிலேயே இருப்பதால் மின்சாரத்தின் தேவை அதிகரித்து உள்ளது. இருப்பினும் மாநிலம் முழுவதும் வருகிற 14-ந்தேதி வரை தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்படும்.
வைரஸ் பரவும் சிரமமான சூழ்நிலையிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு முதல்-அமைச்சர் சார்பிலும், துறை அமைச்சர் சார்பிலும் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.